Sunday, January 9, 2011

படிப்பாளி யார்..? அறிவாளி யார்…?

பள்ளிக்கூடங்கள் விரட்டியடித்தாலும்,  தாமஸ் ஆல்வா எடிசன்களும் நந்தகுமார்களும் சாதனை சிகரங்களை எப்படி எட்டுகின்றனர்? அதே சமயத்தில் எத்தனை எத்தனை எடிசன்களை, நந்தகுமார்களை துளிர்விடும் பருவத்தில்  பள்ளிக்கூட சூழல் முன்னேறவிடாமல் முடக்கிப்  போட்டிருக்கும்? பள்ளிப் படிப்புக்கு லாயக்கற்ற சிறுவன் என தாமஸ் ஆல்வா எடிசன்  வெளியேற்றப்பட்டது போலவே சென்னை நந்தகுமாரும் ஆறாம் வகுப்பு பயின்றபோது  துரத்தியடிக்கப்பட்டார். கற்றல் குறைபாடு என்ற சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அதே நந்தகுமாருக்குள், பள்ளிக்கூடக் கதவுகள் மூடப்பட்ட பிறகு கற்றல் தாகம் ஊற்றெடுத்துப் பெருகியது

இந்த மாயம் நிகழ்ந்தது எப்படி?

சென்னை, எம்.எம்.டி.காலனியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவரே இந்த ரகசியத்தை வெளியிட்டார்.




குழந்தைத் தொழிலாளியாக கட்டட வேலை, கார் மற்றும் இரு சக்கர வாகனப் பட்டறை வேலை, லாட்டரி சீட்டு விற்பனை என பலதரப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, தன்னைச் சுற்றிலும் காணப்பட்ட எத்தனையோ விஷயங்கனைத்தான் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறார்கள் என்ற ஆழமான உண்மை சட்டென்று புலப்பட்டது. பள்ளிக்கூடம் கற்றுத்தர மறுத்த பாடங்களை தானாகவே ஆர்வத்துடன் படித்தார். ப்ளஸ் டூ தேர்வில்  வெற்றி பெற்றும்  எந்தக் கல்லூரியும் இடம் கொடுக்கத் தயாராக இல்லை. ஒரு வழியாக வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கிய வகுப்பில் இடம் கிடைத்தது. இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மொத்தம் 60 மாணவர்களில் வெற்றி பெற்றவர் நந்தகுமார் மட்டுமே.  சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெறும்வரையில் தனக்குள் புதைந்து கிடைந்த அளவற்ற ஆற்றலை அடையாளம் காணமுடியாத நந்தகுமாருக்கு மட்டுமல்லாமல் , இந்த உலகுக்கும் அவரின் தனிப் பெருமையை அடையாளம் காட்டியது, யு.பி.எஸ்.சி தேர்வு. இதில் நாட்டிலேயே முதலிடத்தில்  வெற்றி பெற்றார்.  60 பக்கங்களில் எழுத வேண்டிய தேர்வை 20 பக்கங்களில்தான் எழுத முடிந்தது. வார்த்தைகளாக எழுத முடியாத விடைகளை வரைபடங்களாக, ஓவியங்களாக வடித்தார். மதிப்பெண்கள் குவிந்தன. இன்று நந்தகுமார், வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர்.

  “ எம்.ஏ. தேர்வு வரை நான் படிப்பாளியா..? இல்லையா..? என்பதை சோதித்துப் பார்க்கும் வினாக்கள் கேட்கப்பட்டன. யு.பி.எஸ்.சி. தேர்வில்தான் நான் அறிவாளியா என்பதை மதிப்பிடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன.  அதனால்தான் அகில இந்திய அளவில் என்னால் வெற்றிபெற முடிந்தது” என்று தனது வெற்றி ரகசியத்தை வெளியிட்டார் இந்த சாதனை நாயகன்.

படிப்பாளியாக மாறாமல் அறிவாளியாக மாணவர்கள் உயர வேண்டும் என்பதை மையக் கருவாகக் கொண்டு  எளிமையாக, இயல்பாக அவர் பேசிய பாங்கு மாணவ மாணவியர் மனங்களில் ஆழமாகப் பதிந்தது. ஆசிரியர்களை ஆழமாக யோசிக்க வைத்தது.





2 comments:

  1. நான்...
    கூட்டுப்புழுவாய் உயிர்கொண்ட நாள் முதல்
    பட்டாம்பூச்சியாய் சிறகுவிரிக்கும் நாள் வரையில்...
    சின்னச் சின்னச் சறுக்கல்கள்
    எண்ணிக்கை அறியா ஏமாற்றங்கள்!
    எல்லாம் அனுபவங்களாய்
    உள்ளத்தின் ஆழ்மடிப்பில்
    உறங்கிக் கிடக்கின்றன!

    எத்தனை எத்தனை பட்டாம்பூச்சிகள்
    எனக்கு முன்பும் பின்பும்!
    நான் மட்டும்
    நிரந்தரப் பதிவாய் நிற்கவா போகின்றேன்!?
    நானும் ஒருநாள்...
    கால வெளியில் கரைந்து போகக்கூடும்!
    ஆனால்... ஆனால்...
    பட்டெனும் பகட்டுக்காய்
    கூட்டுப்புழு கருக்கப்படுகிறதே!
    எண்ண விதை முளைக்கும்போதே
    என்னவோ அது களையப்படுகிறதே!

    சிறகடித்துப் பறக்கும் நேரம்
    சிறகொடிந்து கிடந்தால் பாரம்!

    இறைவா...
    பட்டாம்பூச்சியாய் பறக்கும் அனுபவத்தை
    இறைஞ்சிக் கேட்கின்றேன்...
    தந்தருள்வாயே!

    ReplyDelete
  2. திரு. நந்தகுமார் அவர்கள் இளைஞர்களின் வெற்றிக்கு கிடைத்த வினையூக்கி என்பேன் . வாழ்க அவர் . வளர்க தங்கள் தொண்டு !
    - நம்பிக்கை ராமா
    http://jmapsrama.blogspot.com

    ReplyDelete