ஞாயிற்றுக் கிழமை விடுமுறையைக் கொண்டாட்டத்துடன் அனுபவித்து மகிழ, முந்தைய நாள் மாலைப் பொழுதிலேயே சென்னை மாநகரம் உற்சாத்துடன் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது! இரண்டாம் வகுப்பிலிருந்து கல்லுரியில் பயிலும் மாணவியர் வரையிலான நுற்றுக்கும் மேற்பட்டோர் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
உலகுக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஓர் ஆபத்தான பிரச்சினையிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும், அவற்றில் ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பு குறித்தும் உணர்த்துவதற்காக சமுக அக்கறையுடன் அவர்கள் அங்கு ஒன்றுதிரண்டிருந்தனர்
உலகுக்கே பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஓர் ஆபத்தான பிரச்சினையிலிருந்து மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும், அவற்றில் ஒவ்வொரு மனிதனின் பங்களிப்பு குறித்தும் உணர்த்துவதற்காக சமுக அக்கறையுடன் அவர்கள் அங்கு ஒன்றுதிரண்டிருந்தனர்
இயற்கை வளங்களைப் பாழ்படுத்தி, நிலத்தை, நீரை, காற்றை மாசுபடுத்தி, வருங்கால சந்ததியினருக்கு பெரும் துரோகமிழைத்து வரும் மனித இனத்தைத் தண்டிக்க ஆக்ரோஷத்துடன் இயற்கை தயாராகிவிட்டதையும், பூமி வெப்பமடைதல் என்ற கடும் தாக்குதலை அது ஆரம்பித்துள்ளதையும் இந்த மாணவியர் கலைநிகழ்ச்சிகள் வாயிலாக கவலையுடன் விவரித்தனர்.
கிளி வேடம் தரித்துவந்த ஒரு மாணவி எங்கும் பரவிவரும் நச்சுக்காற்றால் பறவை இனம் அழிந்துகொண்டிருப்பதை சோகத்துடன் சுட்டிக்காட்டி, பார்வையாளர்களை ஆழமாக சிந்திக்கவைத்தார்.' எங்கள் இனம் அழிக்கப்படுவதை நீங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் உங்கள் இனம் (மனித இனம்) அழிக்கப்பட்டுவிடும' என எச்சரிக்கை விடுத்தார்.
இயற்கை ஏ.சிக்களான மரங்களை வெட்டிவிட்டு, செயற்கை ஏ.சி. வசதிகளை பெருக்கிக்கொண்டு, காற்று மண்டலத்தை மாசு படுத்துவதாலும், வாகனப்புகை மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப்புகையாலும், ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழுந்து, சூரியனின் புற ஊதாக்கதிர்கள் தாக்குவதால் ஏற்படும் அபாயங்களைப் பார்வையாளர்கள் மனதில் ஆழமாகப் பதியும்படி இந்த மாணவிகள் விவரித்தனர்.
இவர்கள் தயாரித்திருந்த, பூமி வெப்பமடைதல் பேராபத்தை விளக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளில் ஒன்றில் இடம்பெற்றிருந்த, கரியமிலவாயு போர்வைக்குள்ளே கருகித் துடிக்குதே பூமி என்ற வாசகத்தைப் படித்த யாரும் பூமித்தாயின் மவுனமான கதறலை அன்று உணர்ந்திருப்பார்கள். இந்தக் கதறல் வேறு யார் காதுகளில் விழுந்ததோ.. விழவில்லையோ... தெரியாது. ஆனால் அந்த மாலைப் பொழுதில் அங்கு கூடியிருந்த மாணவிகளின் உள்ளங்களை பூமித்தாயின் அந்த மவுனக் கதறல் உலுக்கிவிட்டதை, சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்… பூமியைக் காப்போம்… என அந்த மாணவச் செல்வங்கள் அன்று எடுத்துக்கொண்ட உறுதிமொழி அழுத்தமாக உணர்த்தியது.
சென்னையில் செயல்பட்டவரும் தன்னார்வ அமைப்பான வாத்ஸல்யம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து முதல்முறையாக ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்த பல ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு கட்டியம் கூறுவதாக அமைந்திருந்தது.
பூமியைக் காப்பதில் நமது பங்களிப்பு என்ன?
யோசிப்போம்…மாற்றங்கள் மலர வேண்டிய இடம், நம் உள்ளங்கள்தான்…