Tuesday, October 4, 2011

கல்வி வள்ளல்கள்

                                    


சென்னை, கோடம்பாக்கம் புலியூரில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் மேம்பாட்டுக்காக நண்பர்கள் உதவியுடன் சில முயற்சிகளை கடந்த கல்வியாண்டில் தொடங்கினோம். மிகவும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த அவர்களில் 7 பேர், நல்ல உள்ளங்களின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். சரஸ்வதி, சந்தியா ஆகிய மாணவியர் கோவூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பி.காம் பயில மூன்று ஆண்டுகளுக்கான செலவை நண்பர் திரு.பாலகணேஷ் ஏற்றுக் கொண்டார்

மாணவர் ஜக்கிரியாவுக்கு சென்னை, சூளைமேடு இஸ்லாமிய அமைப்பு ஒன்று நியு காலேஜில் பி.சி. இடம் வாங்கிக் கொடுத்து, கல்லூரிக் கட்டணத்தையும் செலுத்தியது. மாணவர் கிருஷ்ணமுர்த்தி. ஆவடி அருகே உள்ள செயின்ட் மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர பல நண்பர்கள் சேர்ந்து 23,000 ருபாய் நிதியுதவி வழங்கினார்கள். இந்த மாணவருக்காக சென்னை எம்.எம்.டி. காலனியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி ஆசிரியப் பெருமக்கள் 4.500 ரூபாய் வழங்கினார்கள். அந்தப் பள்ளியின் ஆசிரியை திருமதி. ஜெயந்தி அவரது பங்களிப்பாக 5,000 ரூபாய் வழங்கினார். மாணவர் தமிழரசன் கோடம்பாக்கம் சுந்தர்ராஜன் பொறியியல் கல்லூரியில் சேர 10,000 ரூபாயும் மாணவர் பாலமுருகன் சென்னை, சாலிக்கிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சேர, 5,000 ரூபாயும் சென்னை, நுங்கம்பாக்கம் எஸ்ரோ அரிமா சங்கம் உதவுயுடன் வழங்கப்பட்டது. மாணவர் மூர்த்தி, ஆவடி எஸ்.ஏ பொறியியல் கல்லூரியில் பயில, நண்பர் திரு.சுரேஷ் (கோவை) 20,000 ரூபாய் வழங்கினார். இந்த கல்வி உதவித் திட்டம் குறித்து அறிந்த மாணவி வர்ஷிணி(மேற்கு மாம்பலம்), தனது தந்தையிடம் சொல்லி 1,500 ரூபாய் வழங்க வைத்தார். 


உதவி என்று கேட்காமலேயே உதவிக் கரம் நீட்டிய  சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அசாதாரண வள்ளல் மனம் கொண்ட இந்த மாணவியைப் போன்றோர்தான் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்..செயின்ட் மைக்கேல் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் திரு.மித்ராவிடம் மாணவர் கிருஷ்ணமூர்த்தியின் ஏழ்மை நிலையை எடுத்துச் சொன்னதும் கல்லூரிக் கட்டணத்தை பாதியாயக் குறைத்துக்கொண்டார். நிதியுதவி வழங்கிய அனைவருமே இதற்காக காத்துக்கொண்டிருந்தவர்கள் போல ஆர்வத்துடன் உதவினார்கள். கல்வி உதவித்திட்டத்திற்காக பலரையும் சந்தித்தபோது, ஏழை மாணவ,மாணவியரின் உயர்கல்விக்காக உதவுவதை ஏராளமான நல்ல உள்ளங்கள் ஓசைப்படாமல் ஓர் இயக்கமாக செயல்படுத்தி வருவதை உணர முடிந்தது.


Sunday, January 9, 2011

படிப்பாளி யார்..? அறிவாளி யார்…?

பள்ளிக்கூடங்கள் விரட்டியடித்தாலும்,  தாமஸ் ஆல்வா எடிசன்களும் நந்தகுமார்களும் சாதனை சிகரங்களை எப்படி எட்டுகின்றனர்? அதே சமயத்தில் எத்தனை எத்தனை எடிசன்களை, நந்தகுமார்களை துளிர்விடும் பருவத்தில்  பள்ளிக்கூட சூழல் முன்னேறவிடாமல் முடக்கிப்  போட்டிருக்கும்? பள்ளிப் படிப்புக்கு லாயக்கற்ற சிறுவன் என தாமஸ் ஆல்வா எடிசன்  வெளியேற்றப்பட்டது போலவே சென்னை நந்தகுமாரும் ஆறாம் வகுப்பு பயின்றபோது  துரத்தியடிக்கப்பட்டார். கற்றல் குறைபாடு என்ற சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அதே நந்தகுமாருக்குள், பள்ளிக்கூடக் கதவுகள் மூடப்பட்ட பிறகு கற்றல் தாகம் ஊற்றெடுத்துப் பெருகியது

இந்த மாயம் நிகழ்ந்தது எப்படி?

சென்னை, எம்.எம்.டி.காலனியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியில் அவரே இந்த ரகசியத்தை வெளியிட்டார்.




குழந்தைத் தொழிலாளியாக கட்டட வேலை, கார் மற்றும் இரு சக்கர வாகனப் பட்டறை வேலை, லாட்டரி சீட்டு விற்பனை என பலதரப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, தன்னைச் சுற்றிலும் காணப்பட்ட எத்தனையோ விஷயங்கனைத்தான் பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்கிறார்கள் என்ற ஆழமான உண்மை சட்டென்று புலப்பட்டது. பள்ளிக்கூடம் கற்றுத்தர மறுத்த பாடங்களை தானாகவே ஆர்வத்துடன் படித்தார். ப்ளஸ் டூ தேர்வில்  வெற்றி பெற்றும்  எந்தக் கல்லூரியும் இடம் கொடுக்கத் தயாராக இல்லை. ஒரு வழியாக வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கிய வகுப்பில் இடம் கிடைத்தது. இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மொத்தம் 60 மாணவர்களில் வெற்றி பெற்றவர் நந்தகுமார் மட்டுமே.  சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெறும்வரையில் தனக்குள் புதைந்து கிடைந்த அளவற்ற ஆற்றலை அடையாளம் காணமுடியாத நந்தகுமாருக்கு மட்டுமல்லாமல் , இந்த உலகுக்கும் அவரின் தனிப் பெருமையை அடையாளம் காட்டியது, யு.பி.எஸ்.சி தேர்வு. இதில் நாட்டிலேயே முதலிடத்தில்  வெற்றி பெற்றார்.  60 பக்கங்களில் எழுத வேண்டிய தேர்வை 20 பக்கங்களில்தான் எழுத முடிந்தது. வார்த்தைகளாக எழுத முடியாத விடைகளை வரைபடங்களாக, ஓவியங்களாக வடித்தார். மதிப்பெண்கள் குவிந்தன. இன்று நந்தகுமார், வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவின் துணை இயக்குநர்.

  “ எம்.ஏ. தேர்வு வரை நான் படிப்பாளியா..? இல்லையா..? என்பதை சோதித்துப் பார்க்கும் வினாக்கள் கேட்கப்பட்டன. யு.பி.எஸ்.சி. தேர்வில்தான் நான் அறிவாளியா என்பதை மதிப்பிடும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன.  அதனால்தான் அகில இந்திய அளவில் என்னால் வெற்றிபெற முடிந்தது” என்று தனது வெற்றி ரகசியத்தை வெளியிட்டார் இந்த சாதனை நாயகன்.

படிப்பாளியாக மாறாமல் அறிவாளியாக மாணவர்கள் உயர வேண்டும் என்பதை மையக் கருவாகக் கொண்டு  எளிமையாக, இயல்பாக அவர் பேசிய பாங்கு மாணவ மாணவியர் மனங்களில் ஆழமாகப் பதிந்தது. ஆசிரியர்களை ஆழமாக யோசிக்க வைத்தது.